கறிக்குழம்பை சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நாய்க்கு வைத்த உணவை சாப்பிட்ட 3 வயது குழந்தை, உடல் நலம் பாதிக்கப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம், மாதகடுப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். மரம் ஏறும் தொழில் செய்து வரும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சதீஷின் மனைவி ஸ்ரேயா கடந்த 10-ம் தேதி கோழிக்கறி குழம்பு செய்துள்ளார். அதனை தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி ஸ்ரேயா, மீதமிருந்த கோழிக்கறி குழம்பை, நாய்க்கு உண்ண வைத்திருந்த நிலையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரேயாவின் 3 வயது குழந்தை பூமிகா மற்றும் அவரது தங்கையான 1 வயதுடைய ரேணுகாவும், நாய்க்கு வைத்த உணவை தெரியாமல் சாப்பிட்டுள்ளனர். இதில் இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, வாந்தி எடுத்த நிலையில், இருவரையும் அவரது பெற்றோர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் பூமிகாவிற்கு உடல் நலக்குறைவு அதிகமானதால், பூமிகாவை, மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, குழந்தை பூமிகா உயிரிழந்துள்ளது.