தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி ரிசார்ட்டுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அவர் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது, நாளைய தமிழக முதல்வர் எடப்பாடியார் என அதிமுகவினர் முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆளுநர் அர்லேகர், விஜய்யை பதவியேற்க அழைக்கவில்லை. விஜய், மெஜாரிட்டி ஆதரவை காட்டுமாறு ஆளுநர் கேட்டதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ளது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளிடமும் தவெக ஆதரவு கோரியுள்ளது. அந்தக் கட்சிகள் இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில் தான், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கப்போவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்யமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரிக்கு நேற்று இரவு முதல் வரத் தொடங்கினர். இந்நிலையில், இன்று மதியம் புதிய விடுதி வளாகத்துக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மாறினர். இன்னும் இரண்டு நாட்களுக்கு 40 பேர் இங்கு தங்கிக் கொள்ளும் வகையில் இந்த ரிசார்ட்டில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், தளவாய் சுந்தரம், சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மேட்டூர் எம்.எல்.ஏ வெங்கடாசலம் பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன், நெய்வேலி எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரன், புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் உள்பட 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். தவெக ஆட்சி அமைப்பதற்கு தனது மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது. கூடுதலாக 6 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் அதிமுகவில் ஒரு தரப்பினர் தவெகவை ஆதரிக்க விரும்புவதும் தெரிகிறது. தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் அதிமுக தரப்பில் இருந்து ஒரு தரப்பினர் விலகி முடிவு எடுப்பதைத் தடுக்கும் வகையில் அக்கட்சி இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய இன்று டெல்லி புறப்பட்டார். இப்போது மயிலம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று இரவு புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தடைந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் சென்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி, தமிழக அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமி ரிசார்ட்டுக்கு வருகை தந்தபோது, “நாளைய தமிழக முதல்வர் எடப்பாடியார்” என அதிமுகவினர் முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
திட்டமிட்டப்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!…
இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை… 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து : திருப்பதி தேவஸ்தானம்…
விஜய் முதல்வராவதில் இழுபறி.. ”ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்டுகள்”… கபில் சிபல்!