திட்டமிட்டபடியே தேர்வு முடிவு நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய ஆட்சியமைக்காத சூழலில், தேர்வு முடிவுகள் குறித்த நிச்சயமற்ற தன்மையே அதிகரித்து காணப்பட்டது.
தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதனை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அதேபோல 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இத்தேர்வினை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் எழுதியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இப்பணிகள் அண்மையில் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே மாதம் 8-ம் தேதி வெளியிடப்படும் எனவும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ம் தேதி வெளியிடப்படும் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பணிகளை பள்ளிக்கல்வி துறை மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், திட்டமிட்டபடியே தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். அதேநேரம் மாணவர்களும் பெற்றோர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

More Stories
“நாளைய முதல்வர் எடப்பாடியார்”.. புதுச்சேரி ரிசார்ட்டில் எழுந்த முழக்கம்.. அரண்டு போன தவெக!
இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை… 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து : திருப்பதி தேவஸ்தானம்…
விஜய் முதல்வராவதில் இழுபறி.. ”ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்டுகள்”… கபில் சிபல்!