May 1, 2026

தெற்கு ரயில்வே குட்நியூஸ்… திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி விழாவை காண சூப்பர் வாய்ப்பு..

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு, பின்னர் கோயில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருவார்கள். அந்த வகையில் சித்ரா பௌர்ணமி நாளை கொண்டாடப்படுவதால் சிறப்பு ரயில்கள் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முன்பதிவற்ற சிறப்பு ரயில் (எண் 06130), ஏப்ரல் 30 (வியாழன்), மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாளில் காலை 11.45 மணிக்குத் திருவண்ணாமலையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், ரயில் எண் 06129 அதே தேதிகளில் மதியம் 12.15 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, மதியம் 1.45 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். அதேபோல் இன்னொரு முன்பதிவற்ற சிறப்பு ரயில் (எண் 06099), ஏப்ரல் 30, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.50 மணிக்குக் காட்பாடியைச் சென்றடையும். இதன் மறுமார்க்கச் சேவை (எண் 06100), மே 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்குக் காட்பாடியிலிருந்து புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும்.

மேலும், ரயில் எண் 06145 ஏப்ரல் 30, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, இரவு 10.45 மணிக்குத் திருவண்ணாமலையைச் சென்றடையும். இதன் மறுமார்க்க ரயில் (எண் 06146), மே 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். சித்ரா பௌர்ணமி விழாவின் போது திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்கள் சிரமமின்றிப் பயணம் செய்வதை எளிதாக்கும் நோக்கிலேயே இந்த முன்பதிவற்ற சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது” இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

சித்ரா பௌர்ணமி இன்று இரவு 9:57 மணிக்கு தொடங்கி நாளை 1-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11:08 மணிக்கு நிறைவடைய உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சித்ரா பௌர்ணமியை ஒட்டி அண்ணாமலையார் தரிசனம் காணவும் கிரிவலம் மேற்கொள்ளவும் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் 25 முதல் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சிறப்பு பேருந்துகள், தற்காலிக பேருந்து நிலையங்கள், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வெயில் தாக்கத்திலிருந்து விடுபட கோவில் நிர்வாகம் சார்பில் உபயதாரர்கள் மூலமாக 13 டன் தர்பூசணி பழங்கள், 5 டன் வாழைப்பழங்கள், 50,000 லிட்டர் மோர், 3 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 2 இலட்சம் தண்ணீர் பாட்டில்கள் , 50,000 கடலை மிட்டாய்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் வாகனங்கள் மூலமாக கோவில் உட்பிரகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டு பக்தர்களை அனுமதிக்க கூடிய ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், கிளி கோபுரம், வளைகாப்பு மண்டபம், க்யூ லைனில் வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக பிரித்து அனுப்பும் பணியில் தற்போது 50க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.