கூடலூரை அடுத்த தேவர் சோலை பகுதிகளில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற இரண்டு பேரை கேரளாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் தேவர் சோலை காவல் நிலையம் மற்றும் சேரம்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீடுகளில் புகுந்து மொத்தம் 25 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தேவர் சோலை காவல் நிலைய சிறப்புக்காவல் ஆய்வாளர் இப்ராகிம், தலைமை காவலர் பிரபாகரன், முதுநிலை காவலர் சுரேஷ், மற்றும் காவலர் முத்து முருகன் அடங்கிய தனிப்படையினர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், கிராமங்களில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் ஒலி பெருக்கியில் வீடுகளில் புகுந்து திருடும் மர்ம நபர்கள் குறித்து எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து அருகில் உள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்ட போலீஸ் அலுவலகம் இணைந்து தேவர் சோலை காவல் நிலைய போலீசாருடன் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து வயநாடு மாவட்ட தனிப்படை போலீசாருடன் இணைந்து கண்ணூரைச் சேர்ந்த ஆலக்கோடு முகமது (46) மற்றும் வயநாடு மாவட்டம் கம்பலக்காட்டைச் சேர்ந்த ஜோஸ் (72) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட இருவர் மீதும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 150 பவுன் நகை திருடிய 11 வழக்குகள் உள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் வயநாடு மாவட்டம் மானந்தவாடி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தொடர்புடைய கடைசி நபரும் கைது – மொத்தமாக 18 பேர் சிக்கினர்!
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.5 லட்சம் பறிப்பு – தம்பதி கைது