கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் ரவி ரத்தோர் (31) பணியாற்றி வந்தார். ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை சம்பளம் பெற்ற இவர். சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகி, போலி ஆன்லைன் டிரேடிங் தளத்தை தொடங்கினார்.
இந்த தளத்தை நம்பி நூற்றுக்கணக்கான பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் ரூ.100 கோடியை முதலீடு செய்தனர். இந்நிலையில், டெல்லியை சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர், அந்த டிரேடிங் தளம் மீது காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார். இதன் பேரில் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி பெங்களூருவில் தங்கியிருந்த ரவி ரத்தோரை கைது செய்தனர்.
இது குறித்து டெல்லி போலீஸார் கூறும்போது, “மத்திய பிரதேசத்தின் சனாவாத் நகரில் ரவி ரத்தோர் சில ஆண்டுகளுக்கு முன்பு கால் சென்டரை அமைத்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களை குறிவைத்து மோசடி நடைபெற்று உள்ளது. முதல் கட்ட விசாரணையில் ரவி ரத்தோர் போலி ஆன்லைன் டிரேடிங் தளம் மூலம் ரூ.99.77 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மோசடி பணத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஆடம்பர மாளிகையை அவர் கட்டி உள்ளார். ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி உள்ளார். ஆடம்பர கார்களை வாங்கி குவித்துள்ளார். ரவி ரத்தோர் பயன்படுத்திய லேப் டாப்புகள், மொபைல் போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.

More Stories
“தங்கம் சவரனுக்கு ரூ.2 லட்சத்தை தொடும்?”.. பேரதிர்ச்சி தகவல்…
ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது…
செவிலியர் பணி வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது…