சென்னை, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கி தருவதாகக் கூறி ரூ.10.81 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக ரயில்வே மருத்துவமனை ஊழியரை நேற்று ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரியா (24). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் ஜெயப்பிரியாவுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சென்னை, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை ஊழியரான ரோஹித் (29) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
இச்சூழலில், ரோஹித், கடந்த 2024-ம் ஆண்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாக கூறி, ஜெயப்பிரியாவிடம் ரூ.10.81 லட்சத்தை பெற்றுள்ளார். தொடர்ந்து, ரோஹித், செவிலியர் பணிக்கான பணி ஆணையை ஜெயப்பிரியாவிடம் அளித்துள்ளார். பிறகு, அந்த ஆணை போலியானது என அறிந்த ஜெயப்பிரியா, தான் அளித்த பணத்தை திரும்ப தருமாறு ரோஹித்திடம் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை ரோஹித் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த மோசடி குறித்து ஜெயப்பிரியா அளித்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ரோஹித்தை வேலைவாய்ப்பு மோசடி பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!