உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி…

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை நியமிக்கவும் தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த விடியா திமுக ஆட்சியில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் மொத்தம் 42,064 தேர்வர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழிக்கான தேர்வு தவிர, 150 மதிப்பெண்களுக்கான பாடம் சார்ந்த புறநிலை வினாக்கள் பகுதி மற்றும் 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரைத் தாள் தேர்வு நடைபெற்றது.

உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த 25.6.2026 – வியாழக் கிழமையன்று அறிவித்ததைத் தொடர்ந்து, விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

புறநிலை வினாத்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள், விளக்கக் கட்டுரைப் பிரிவு தேர்வில் 42 தேர்வர்கள் ‘0’ மதிப்பெண்ணும் மற்றும் 106 தேர்வர்கள் ஒரு மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, புறநிலை வினாத்தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்ற தமிழ் பிரிவைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு, கட்டுரைத் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு நேர்மாறாக, புறநிலை வினாத்தாளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற தேர்வர்களுக்கு, 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில், 50-க்கு 49 வரை அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், இது அவர்களின் இறுதித் தரவரிசையை மாற்றியமைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

“புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு தேர்வர், விளக்கமுறை வினாத்தாளில் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற முடியும்? அல்லது இதற்கு நேர்மாறாக எப்படி நடக்க முடியும்? மதிப்பெண்கள் சீரற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்பதை இது பிரதிபலிக்கிறது. படித்த இளைஞர்களின் எதிர்காலத்துடன் TRB விளையாடுகிறது” என்று தேர்வு எழுதியவர்களும், தமிழ் நாடு அரசு கலைக் கல்லூரி சிறப்பு விரிவுரையாளர் சங்க நிர்வாகிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.