ரேஷன் மூலம் இலவச உணவு தானியம் பெறும் ஏழை குடும்பங்களுக்கு முக்கிய மாற்றத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. குடும்ப அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் 35 கிலோ உணவு தானிய ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டம், மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிலமற்ற தொழிலாளர்கள், விதவைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயனடைகின்றனர். தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னுரிமைக் குடும்பங்களுக்கு மட்டும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் உணவு தானியம் வழங்கப்படுகிறது.
சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், AAY திட்டத்தில் குடும்பத்திற்கு 35 கிலோ வழங்கும் முறைக்குப் பதிலாக, ஒருவருக்கு 7 கிலோ வீதம் உணவு தானியம் வழங்கப்படும். இதனால் 2 பேர் கொண்ட குடும்பத்திற்கு 14 கிலோ மட்டுமே கிடைக்கும். ஆனால், 5 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தற்போதைய 35 கிலோ உச்சவரம்பு தொடரும்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமமான ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக இந்த மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்காக தேசிய உணவுப் பாதுகாப்பு (திருத்த) மசோதா–2026 கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் ஜூலை 13, 2026-க்குள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகே புதிய ஒதுக்கீட்டு முறை அமலுக்கு வரும்

More Stories
உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி…
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் அனுமதிக்கு ரூ.100 கோடி லஞ்சம் : பி.டி. அரசகுமார் கைது…
ரயில் நிலையம் முதல் ஷாப்பிங் மால் வரை… சென்னையில் நாளை போலியோ சொட்டு மருந்து