பிஹார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவம்பர் 1) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

பிஹார் சட்டமன்றத் தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. இங்குள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 122 சட்டமன்ற தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின.

இது முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகமாகும். குறிப்பாக முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவானது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்தன.

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றிருந்தன. இந்த அணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன.

காங்கிரஸ், ஆர்ஜேடியின் மகாபந்தன் இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேலும் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேஜஸ்வி யாதவின் அண்ணன் தேஜ் பிரதாப் யாதவின் ஜனசக்தி ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன.

இந்நிலையில், பிஹார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. .முதலில் தபால் வாக்குகளும், அதனை தொடர்ந்து மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 243 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பிஹாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. புதிய ஆட்சி யார் அமைக்கிறார்கள் என்பது இன்று பிற்பகல் 12 மணிக்குள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. கிட்டத்தட்ட 38 மாவட்டங்களில் 57 எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மின்தளத்தில் தரவு சரிபார்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் results.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும். மாலைக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.