சத்தீஸ்கரில் ரூ.27 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட 6 மாவோயிஸ்டுகளைபாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவிற்குள் உள்ள காடுகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பீஜப்பூர் டிஆர்ஜி, தண்டேவாடா டிஆர்ஜி, எஸ்டிஎஃப் மற்றும் பாதுகாப்புப் படையினர் காடுகளில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளைத் தேடினர். அப்போது திடீரென மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட ஆரம்பித்தனர்.

இதனால் பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த செயல்பாட்டாளர் பாப்பா ராவின் மனைவி ஊர்மிளா மற்றும் புக்கண்ணா குடியம் ஆகியோர் அடங்குவர். சுட்டுக் கொல்லப்பட்ட ஆறு பேரின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக, பீஜப்பூர் காவல் அதிகாரி ஜிதேந்திர யாதவ் கூறுகையில், ” சத்தீஸ்கர் என்கவுன்டரில் ரூ.27 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏ.கே 47, எல்எம்ஜி, ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. பீஜப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 144 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 499 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 560 பேர் சரணடைந்துள்ளனர்” என்றார்.