தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், 12ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியை, பத்து நாட்களுக்கு பிறகு, காவல்துறை கைது செய்துள்ளது.
ஏற்கனவே, குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வந்தன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, காவல்துறை அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி இருக்கும் முனீஸ்வரன் என்ற நபர் குறித்து தமிழக பாஜக நிர்வாகியான அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அண்ணாமலையின் கேள்விகள்:-
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கடந்த 2020ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு..!
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு.ஸ்டாலின், இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றும் அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.






