டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு நடத்தியது பயங்கரவாதி டாக்டர் உமர் நபி என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியின் பரபரப்பான செங்கோட்டையின் நுழைவு வாயில் ஒன்றின் அருகே நகர்ந்து சென்ற கார் வெடித்து சிதறியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 24 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை கைது செய்தபோது, அவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. காஷ்மீர், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் இருந்து, 2900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் கொடுத்த தகவலின்படி,ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஸாம்மில் அஹமதை உத்தரப்பிரதேச மாநிலம், ஷஹரன்பூரில் போலீஸார் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீதும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும், ஹரியாணாவின் அல் பலாஹ் மருத்துவ பல்கலையில் பணியாற்றியவர்கள் என தெரிந்தது.
இதே பல்கலையைச் சேர்ந்த நான்காவது டாக்டர் உமர் நபிக்கும் இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஜம்மூ காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், டெல்லியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று அவர் வெடிக்க வைத்தார். இதில், 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பயங்கரவாத தாக்குதல் தான் என்பதை மத்திய அரசு உறுதி செய்தது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்று தாக்குதல் நடத்தியது டாக்டர் உமர் நபி என்று சந்தேகிக்கப்பட்டது. அவர் ஓட்டிச் சென்ற கார் ஏற்கெனவே பலருக்கு கைமாறியிருந்தாலும், கடைசியாக அந்த காரை டாக்டர் உமர் தான் வாங்கியிருந்தார். அவர் இறந்ததால் அதனை உறுதி செய்ய காரில் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து டிஎன்ஏ மாதிரி மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் உமரின் குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த இரண்டு டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளும் தற்போது ஒத்துப்போய் உள்ளது.
குறிப்பாக, டாக்டர் உமரின் டிஎன்ஏ மாதிரி அவரது தாய் மற்றும் சகோதரரின் டிஎன்ஏவுடன் நூறு சதவீதம் பொருந்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது டாக்டர் உமர் நபி தான் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
