April 18, 2026

டெல்லி கார் குண்டு வெடிப்பு:நெஞ்சை உலுக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

டெல்லியில் காரில் குண்டு வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் பரபரப்பான செங்கோட்டையின் நுழைவு வாயில் ஒன்றின் அருகே நகர்ந்து சென்ற கார் வெடித்து சிதறியதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 24 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த காரை டாக்டர் உமர் நபி ஓட்டி வந்ததும், அவர் ஜம்மூ காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டடத்தில் டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது பயங்கரவாத தாக்குதல் என்றும், அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்தியஅரசு அறிவித்தது.

இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில், செங்கோட்டை அருகே கூட்ட நெரிசலின் காரணமாக கார்கள் மெதுவாக நகர்ந்து செல்வதும், அதற்கு மத்தியில் வந்துகொண்டிருந்த அந்த கார் திடீரென வெடித்து சிதறுவதும் பதிவாகியுள்ளது.

நவம்பர் 10-ம் தேதி மாலை 6:50 மணி 58 நொடி என்ற கால அளவில் இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11 வினாடிகளே ஓடும் இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையின் செளக் பகுதியை நோக்கி வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சியை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.