September 10, 2026

ஆண்டிப்பட்டி 2026: அதிமுகவில் மீண்டும் லோகிராஜன்? – ‘அணி மாறியவருக்கு வாய்ப்பா?’ எனத் தொண்டர்கள் குமுறல்!

அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில், வரும் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலில் வெற்றியை நழுவவிட்ட அதிமுக, இந்த முறை தொகுதியை மீட்டெடுக்கத் துடிக்கிறது. ஆனால், வேட்பாளர் தேர்வில் நிலவும் அதிருப்தி கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என்ற அச்சம் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

​2021 தேர்தல் பாடம்: ஒரு பார்வை

​கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளர் மகாராஜன் 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் லோகிராஜன் அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆண்டிப்பட்டி பகுதியில் திமுகவே அதிக வாக்குகளைப் பெற்று தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

​யார் இந்த லோகிராஜன்? –

சர்ச்சையின் பின்னணி
​தற்போது மீண்டும் லோகிராஜனுக்கே வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. இவர் ALR கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் ஒரு தொழிலதிபர்.இவரைச் சுற்றி எழுந்துள்ள முக்கிய விமர்சனங்கள் பற்றி பார்ப்போம்.

​விசுவாசமா? வாய்ப்பா?: இவர் ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டவர். கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, தனது அரசியல் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினார். “அணி மாறியவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதா?” எனப் பழைய விசுவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

கரன்சி அரசியல்: கட்சியின் களப்பணிகளில் ஈடுபடாமல், பண பலத்தை மட்டுமே நம்பி இவர் சீட் வாங்க முயற்சிப்பதாகத் தொகுதியில் பரவலாகப் பேசப்படுகிறது.

​செல்வாக்கு சரிவு: ஏற்கனவே ஒருமுறை தோல்வியைத் தழுவிய வேட்பாளருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது, தொகுதியில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை மேலும் குறைக்கும் எனத் தொண்டர்கள் கருதுகின்றனர்.

​ஆண்டிப்பட்டி: எம்.ஜி.ஆர் – அம்மா காலத்து முக்கியத்துவம்

​ஆண்டிப்பட்டி தொகுதி சாதாரணமான ஒன்றல்ல. இது அதிமுகவின் உணர்வுப்பூர்வமான தொகுதி:
​எம்.ஜி.ஆர் (1984) மற்றும் ஜெயலலிதா (2002, 2006) ஆகியோர் வெற்றி பெற்று முதலமைச்சரான தொகுதி இது.

​தேனி மாவட்டத்தின் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் மையப்புள்ளியாக இத்தொகுதி உள்ளது. வைகை அணை, விவசாயப் பிரச்சனைகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை இத்தொகுதியின் தீர்க்கப்படாத கோரிக்கைகளாக உள்ளன.

​தொண்டர்களின் கோரிக்கை: எடப்பாடியார் கவனிப்பாரா?

​”ஆண்டிப்பட்டிக்குத் தேவை பணக்கார வேட்பாளர் அல்ல, மண்ணின் மைந்தராகவும், கட்சியின் உண்மையான விசுவாசியாகவும் இருப்பவரே வேண்டும்” என்பதே பொதுவான குரலாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி , இந்த அதிருப்தியைக் கவனித்து வேட்பாளர் தேர்வில் அதிரடி மாற்றம் செய்வாரா அல்லது லோகிராஜனுக்கே மீண்டும் வாய்ப்பளிப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

You may have missed