சென்னை ராயப்பேட்டையில் போதை மற்றும் அதிகார மிரட்டலில் அநாகரீகமாக நடந்துகொண்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியின் விரிவான பின்னணி இதோ:

சம்பவம் என்ன?

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 32 வயது பெண் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக கைதாகி பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது காவலர் சூர்யா அவரது எண்ணை பெற்று அப்பெண்ணிடம்  தொடர்ந்து பேசி வந்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

காவலர் அத்துமீறல்

இந்நிலையில் நேற்று மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சூர்யா அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் லாவகமாக வீட்டுக்குள்ளே வைத்து காவலரை அப்பெண் பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர் அழைத்துச் செல்லும் போது ‘சீருடையில் இருப்பதால் அவரை விடுவதாகவும் இல்லை என்றால் பொதுமக்கள் சேர்ந்து அவரை தாக்கி இருப்போம்’ என்று கூறும்  வீடியோ காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று  வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்த சூர்யா மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பணியிடை நீக்கம்

​சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்​ பெரில், விசாரணை அறிக்கையின் அடிப்படையில், காவலர் சூர்யா பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், அவர் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​பொதுமக்கள் அதிருப்தி:

காவல்துறையில் இது போன்ற கருப்பு ஆடுகள் இருக்கும்போது, அவர்கள் மீது தாமதமின்றி எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது