September 10, 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நாளை (நவம்பர்16) நடை திறக்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகிறார்கள். இங்கு ஆண்டு தோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 18-ம் தேதி படிக்குக் கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். பிறகு சபரிமலை, மாளிகப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் பிரசாத் நம்பூதிரி மற்றும் மனு நம்பூதிரி ஆகியோர் மூலம் மந்திரம் சொல்லி பொறுப்பேற்று கொள்வார்கள். மேலும் இருவரும் தந்திரி முன்னிலையில் அபிஷேகம் செய்யப்படுவார்கள். நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.

கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி தலைமையில் தினசரி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

நடப்பு சீசனையொட்டி டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சீசனையொட்டி நிலக்கல், எருமேலியில் ஒரே நேரத்தில் 14 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும்.

You may have missed