April 15, 2026

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி…பிக் பாஸ் பிரபலம் அதிரடியாக கைது!

பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக் பாஸ் பிரபலமான நடிகர் தினேஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏப்டுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக 3 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பிரபல சீரியல் நடிகர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு வாங்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணத்தை திருப்பி கேட்கச் சென்ற பெண்ணின் தந்தையை கம்பால் அடித்து மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், சீரியல் நடிகர் தினேஷ் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் பணத்தை திருப்பிக் கேட்டபோது தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி நடிகர் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.