பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது…

ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது அசரப் அலி (26) என்பவர், அங்குள்ள அம்மா உணவகம் எதிரே ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் செயல்பட்டு வந்த அவரது கடையில் நேற்று நடந்த சம்பவம்தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுப்பதற்காக அந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் முகமது அசரப் அலி தனது செல்போனில் அந்த பெண்ணின் புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணை ஆபாச கோணத்தில் வீடியோவும் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எப்படியோ அறிந்துகொண்ட அந்த பெண் உடனடியாக தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த கணவர் உடனடியாக கடைக்கு விரைந்து வந்து அசரப் அலியிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், நிலைமை மோசமாகும் என்பதை உணர்ந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவசரத்தில் அவர் பயன்படுத்திய செல்போன் மட்டும் அங்கேயே சிக்கியது. இதையடுத்து அந்த தம்பதி நேரடியாக பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதில் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடைக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களையும் தொலைவில் இருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 77-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிறர் அறியாமல் அவர்களின் அந்தரங்கத்தை கண்காணிப்பது மற்றும் பதிவு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மேற்பார்வையில் செயல்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.