உலகத்திறன் போட்டியில் பங்கேற்க சீனா செல்லும் கிருஷ்ணகிரி இளைஞர்: மாவட்ட ஆட்சியர்தினேஷ் குமார் நேரில் வாழ்த்தி வழியனுப்பினார்!

கிருஷ்ணகிரி:

சீனாவில் நடைபெற உள்ள “வேர்ல்டு ஸ்கில்ஸ் ஷாங்காய் 2026” (World Skills Shanghai 2026) சர்வதேச திறனாய்வுப் போட்டியில், இந்திய நாட்டின் சார்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞருக்கு, மாவட்ட ஆட்சியர் நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

​கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், நாச்சிகுப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பால்ராஜ் – காந்தம்மாள் தம்பதியரின் மகன் K.B. ராகுல், BE EEE. இவர் சீனாவில் நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற சர்வதேச அளவிலான ‘வேர்ல்டு ஸ்கில்ஸ் ஷாங்காய் 2026’ திறனாய்வுப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.

​இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அரங்கில் விளையாடச் செல்லும் இவரை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் நேரில் அழைத்து, தனது மனமார்ந்த பாராட்டுகளையும் ஆசிகளையும் தெரிவித்து, முறைப்படி வழியனுப்பி வைத்தார். சர்வதேச அளவில் போட்டியிட்டு இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இந்த சந்திப்பின் போது வாழ்த்தினார்.

​இந்நிகழ்வின் போது, நாச்சிகுப்பம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா நாகராஜ் அவர்களும் உடனிருந்து, சாதனை இளைஞர் ராகுலுக்கு வாழ்த்துகளைக் கூறி வழியனுப்பி வைத்தார். சர்வதேச அளவில் திறமையை நிரூபிக்கச் செல்லும் கிராமப்புற இளைஞர் ராகுலுக்குப் பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.