திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு..

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பணம் பெற்றுக்கொண்டு பக்தர்களை அனுமதிக்கும் விவகாரத்தில் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. அமைச்சரிடம் ஜி-பேயில் பணம் பெற்ற அர்ச்சகர் மற்றும் 2 காவலாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடவுள் முருகரின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலக பிரசத்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறாகள். கோயிலில் பணம் வாங்கி கொண்டு அர்ச்சர்கள், கோவில் காவலாளிகள் சிலரை தரிசனம் செய்ய அனுமதிப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலையில் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சர் ரமேஷ் இன்று யாரிடமும் கூறாமல் வந்தார். அப்போது அமைச்சர் மாஸ்க் அணிந்திருந்தார். அவருடன் வந்த அமைச்சரின் உதவியாளரிடம் ஒரு அர்ச்சகர் கோயில் முருகனை தரிசனம் செய்ய ஒரு நபருக்கு ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கு 4 ஆயிரம் வேண்டும் என்று கேட்டதாகவும், அவர் அந்த பணத்தை அமைச்சரின் உதவியாளர் ஜீபே மூலம் பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் அப்போது அமைச்சர் ரமேஷ் அந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்து கொண்டு இருந்தாக கூறப்படுகிறது. பின்னர் அமைச்சர் கோயில் அன்னதானத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அமைச்சரிடமே பணம் வாங்கி கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேரிடமும் விளக்கம் கடிதம் பெற்றார். தொடர்ந்து காவலாளிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அர்ச்சகர் ஐயப்பன் என்பவர் தன்னார்வலராக கோயிலில் பணி செய்து வருவதால் அவர் கோயில் பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் அர்ச்சகர் ஐயப்பன், காவலாளிகள் கருப்பசாமி, தோப்பு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.