மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!

விதிகளை மீறும் கல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் பல குவாரிகள் மூடப்பட்ட நிலையில், மதுரையில் இன்று 11 குவாரிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த இரண்டு கல்குவாரிகளை தற்காலிகமாக மூடும்படி தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். பொதுமக்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 15 கல்குவாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ட்ரோன் உதவியுடன் ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, மே 25 அன்று அமைச்சர் டி.கே.பிரபு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் அளித்த அறிவுறுத்தலின்படியும், ட்ரோன் ஆய்வறிக்கையின் அடிப்படையிலும், ஆய்வு செய்யப்பட்ட 15 குவாரிகளில் விதிகளை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகள் உடனடியாக மூடப்பட்டன.

இந்த விதிமீறல்களின் தீவிரம் குறித்த விரிவான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும். மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சமர்ப்பிக்கும் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மதுரையிலும் 11 குவாரிகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. மூடப்பட்ட குவாரிகள் அனைத்தும் விதிமீறல் குற்றச்சாட்டில் சிக்கியவை. எனவே இந்த குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது, விதி மீறலில் ஈடுபட்டதற்காக கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.