September 22, 2026

மத்திய அரசு ஓய்வூதியம் ரூ.20,000 ஆக உயர்கிறதா.? – 8வது ஊதியக் குழுவில் வெளியான மாஸ் அப்டேட்…

8வது ஊதியக் குழுவை முன்னிட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு, குடும்ப ஓய்வூதிய மேம்பாடு மற்றும் கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க NC-JCM கோரிக்கை விடுத்துள்ளது. இறுதி முடிவு மத்திய அரசின் ஒப்புதலை பொறுத்தே அமையும். 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய பிரதிநிதி அமைப்பான தேசிய ஆலோசனைக் குழு (NC-JCM), ஓய்வூதியதாரர்களின் நலனை மேம்படுத்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை 8வது ஊதியக் குழுவிடம் முன்வைத்துள்ளது.

அவற்றில் முக்கியமான கோரிக்கையாக, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்பதும் இடம்பெற்றுள்ளது. தற்போதைய பணவீக்கம் மற்றும் வாழ்க்கை செலவின உயர்வை கருத்தில் கொண்டு, ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பொருளாதார பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியத்தை NC-JCM வலியுறுத்தியுள்ளது. மேலும், ஓய்வூதிய கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்து, கடைசியாக பெற்ற ஊதியத்தின் 50 சதவீதமாக உள்ள முழு ஓய்வூதியத்தை 67 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தவும், வயதின் அடிப்படையில் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்தை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியத்தில் முன்பணமாக பெறப்படும் தொகை (Commutation) மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தி, முழு ஓய்வூதியத்தை மீண்டும் பெறும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு “ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம்” (One Rank One Pension) முறையை அமல்படுத்தவும், ஓய்வூதிய திருத்தங்களை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமமாக வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளை தனியாக ஆய்வு செய்யும் பிரிவை 8வது ஊதியக் குழுவில் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ.20,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் குறித்த கோரிக்கைகள் தற்போது பரிந்துரைகளாக மட்டுமே உள்ளன. அவை 8வது ஊதியக் குழுவின் இறுதி பரிந்துரைகளிலும், பின்னர் மத்திய அரசின் ஒப்புதலிலும் இடம்பெற்றால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.