September 22, 2026

பதிவு செய்த அன்றே கையில் பத்திரம்… மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…

பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், தேவையற்ற காரணங்களுக்காக ஆவணங்களை நிலுவையில் வைத்து மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.யோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாவட்ட பதிவாளர் அலுவலக கூட்டரங்கில், பதிவுத்துறை அதிகாரிகளின் பணித்திறன் குறித்த முதல் ஆய்வுக் கூட்டம் இன்று (09-06-2026) நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் ஜெ.குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் முன்னிலையில், அமைச்சர் யோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மண்டல, மாவட்டப் பதிவு அதிகாரிகள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

பதிவுக்கு வரும் பொதுமக்களை அலுவலகத்தில் அமரவைத்து, அவர்களின் தேவைகளைச் சரிவரப் பூர்த்தி செய்ய வேண்டும். எவ்வித தாமதமும் இன்றி, ஆவணங்களை அன்றைய தினமே பொதுமக்களிடம் திரும்ப வழங்க வேண்டும். 

பதிவு தொடர்பாகப் பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களை உடனுக்குடன், புரியும்படி பொறுமையோடு எடுத்துக்கூற வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும். 

கட்டிட களப்பணிக்கான ஆவணங்களைத் தாமதமின்றி உடனடியாகப் பார்வையிட்டு வழங்க வேண்டும். மாவட்டப் பதிவாளர்கள் நிலுவையில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து, உடனுக்குடன் உரிய தீர்வு காண வேண்டும்.

நடப்பு மாத இறுதிக்குள், அனைத்து நிலப் புல எண்களுக்கும் (Survey Numbers) சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 2026-2027 ஆம் நிதி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை அடைவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்

அதிகாரிகள் அனைவரும் முழுமையான அர்ப்பணிப்புடனும், ஈடுபாடுடனும் பணியாற்ற வேண்டும் என இந்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.