திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இன்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரை, லோக் பவனில் சந்தித்து தவெக அரசு மீதான புகார்களை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி, ஆளுநர் கொடுத்த பதில் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. திமுக எம்.எல்.ஏ. சீனிவாசனிடம் ரூ. 50 கோடி தவெக பேரம் பேசியுள்ளது என பல புகார்களை தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது; “அரசுக்கு தொடர்பில்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் அமைச்சரவைக் கூட்டம், அரசு உயர்மட்டக் கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கூட்டங்களில் முதலமைச்சர் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு உத்தரவிடும் கேவலமான நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 1ஆம் தேதியே ஆளுநருக்கு மனு கொடுத்தோம். அப்போது அவர் இங்கு இல்லாத காரணத்தினால், இன்று ஆளுநரை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கினோம். அதனை கூர்ந்து கவனித்த ஆளுநர், “அப்படி அவசியமாக அவர்கள் இருவரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள பங்கேற்கவேண்டுமென்றால் முதலமைச்சர், அவர்களை அமைச்சராக்கியிருக்க வேண்டியதுதானே” என ஆளுநர் கூறினார். ஆளுநரின் இந்தப் பதில் ஆட்சியில் தவறு நடக்கிறது என்பதை அவரே ஒப்புக்கொள்வதுபோல் இருந்தது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. எனவே இது குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் எனும் நம்பிக்கை வந்துள்ளது.
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டதே கிடையாது. மேலும், அவதூறு வழக்குகளில் கைது செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால், நேற்று அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மேலும், திருச்செந்தூரில் கைது செய்யப்பட்ட அவரை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று அங்கு ஐந்து, ஆறு மணி நேரமாக காவல்துறையினர், அவரை தவெகவில் இணைந்துவிடும்படி கூறியதாக அவரே தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார்.
இதுமட்டுமின்றி எம்.எல்.ஏ. ஆஸ்டினிடமும் பேரம் பேசியுள்ளனர். ஆஸ்டினிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து போட்டியிட்டு வெல்ல வைத்து, அவர் கேட்கும் அமைச்சர் பதவியை கொடுப்பதாக பேரம் பேசியுள்ளனர். இதனை நேர்மையாக அவர்கள் மறுக்க வேண்டும். நாங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருக்கிறோம். இதேபோல், சீனிவாசனிடம் ரூ. 50 கோடி பேரம் பேசியுள்ளனர். இவர்களிடம் யார் யார் பேசினார்கள் என்பதன் விவரங்களையும் ஆளுநரிடம் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளோம்.
நேற்று தவெகவில் சேர்ந்த விஜய்பாஸ்கர், ஓ.எஸ். மணியனிடம், தவெகவிற்கு வந்துவிட்டால் அமைச்சர் பதவி கொடுப்பதாக பேசியதாக அவரே தெரிவித்துள்ளார். ஆகவே ஆள் பிடிப்பதற்காகவே இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுக்கிறேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
குதிரை பேரம் என்பது தமிழ்நாட்டிற்கு தெரியாத ஒன்று என ஆளுநரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், “ஆமாம், 1952ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் இதுபோல் நடந்ததில்லை. இதன் மூலம், மாநிலத்தின் மரியாதையும் மதிப்பும் கெட்டுவிடுகிறது” என ஆளுநர் எங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

More Stories
“கிரிமினல் பின்னணி கொண்ட கேபினட்… திமுகவை கேள்வி கேட்க அருகதை இல்லை” – திமுக பரந்தாமன்…
மயிலாடுதுறை : பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு..
திருப்பூர்: மாணவிகளிடம் சில்மிஷம்; தலைமை ஆசிரியர் கைது…