கர்நாடக மாநிலம் மைசூரில், முன்னாள் காதலனின் எல்லை மீறிய தொல்லை மற்றும் மிரட்டல் காரணமாக, நாளை திருமணம் நடக்கவிருந்த இளம் பெண் தனது பெற்றோருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் மாவட்டம், கெம்பய்யனஹண்டி கிராமத்தைச் சேர்ந்த சிவண்ணா (54), அவரது மனைவி நாகரத்தினம் (44) தம்பதியரின் மகள் ரக்ஷிதா (21). ரக்ஷிதா அதே கிராமத்தைச் சேர்ந்த உல்லாஸ் கவுடா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். மகளின் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரக்ஷிதா தனது காதலை முறித்துக் கொண்டு, பெற்றோரின் விருப்பப்படி வேறு ஒரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நாளை (ஜூன் 24) அவருக்குத் திருமணம் நடைபெறவிருந்ததால், திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.
ரக்ஷிதாவின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்ட உல்லாஸ் கவுடா, ரக்ஷிதாவின் பெற்றோர மிரட்டியதோடு, ஊர் பஞ்சாயத்தையும் கூட்டியுள்ளார். அங்கு அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்காததால், தான் காதலித்தபோது எடுத்த ரக்ஷிதாவின் நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை வைத்து மிரட்டத் தொடங்கினார்.
கொடுமையின் உச்சமாக, நாளை திருமணம் செய்து கொள்ளவிருந்த மணமகனின் செல்போன் எண்ணுக்கே அந்தப் புகைப்படங்களையும், குறுந்தகவல்களையும் உல்லாஸ் கவுடா அனுப்பியுள்ளார். இந்தச் செயலால் மணமகன் வீட்டாருக்கு முன்னால் ரக்ஷிதாவின் குடும்பத்திற்குப் பெரும் அவமானம் ஏற்பட்டது.
திருமணம் தடைபடும் சூழல் உருவானதாலும், சமூகத்தில் ஏற்பட்ட இந்த அவமானத்தைத் தாங்க முடியாமலும் கடும் மன வேதனை அடைந்த ரக்ஷிதா, அவரது தந்தை சிவண்ணா மற்றும் தாய் நாகரத்தினம் ஆகிய மூவரும் நேற்று இரவு வாழைப்பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.காலை மூவரும் வாயில் நுரை தள்ளியபடி சடலமாகக் கிடந்ததைக் கண்டு சிவண்ணாவின் தாயார் அலறியுள்ளார்
தகவலறிந்து வந்த டி.நரசிபுரா போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எழுதிய உருக்கமான மரணக் கடிதம் சிக்கியது. அதில், “தங்களின் சாவுக்கு உல்லாஸ் கவுடாவின் காதல் தொல்லையும், மிரட்டலுமே காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான உல்லாஸ் கவுடாவை வலை வீசி தேடி வருகின்றனர். மூன்று பேரின் தற்கொலைக்கு காரணமான உல்லாஸ் கவுடாவை உடனடியாக கைது செய்யக்கோரி ரக்ஷிதாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் காதலனின் தொல்லையால் நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் பெற்றோருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More Stories
உயிரிழந்தவர் பெயரில் பத்திரம் தயாரித்து நில மோசடி:
“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”… அரசு மருத்துவமனை பிரசவங்களை அதிகரிக்குமா?
மரத்தில் கார் மோதியதில் 3பேர் சம்பவ இடத்திலேயே பலி…