“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”… அரசு மருத்துவமனை பிரசவங்களை அதிகரிக்குமா?

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு இத்திட்டத்தை கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்

இத்திட்டம் 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் செயல்படுத்தப்படும் என்றும் பேரறிஞர் அண்ணாவின்  பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்ப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ₹755.83 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டம் மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சுகாதாரக் குறியீடுகளில் முன்னிலையில் இருந்தாலும், சமீபத்திய தேசிய குடும்ப நல சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகள் சில கட்டமைப்பு மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

அண்மையில் வெளியான 6வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS-6) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 99.7 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான்  நடைபெறுகின்றன. இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் விகிதம் முந்தைய 5வது கணக்கெடுப்பில் 66.9 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது  63.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் 54.2 சதவீதப் பிரசவங்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. அதேவேளையில் கிராமப்புறங்களில் இது 70.2 சதவீதமாக உள்ளது.

எனவே, நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர, ஏழை எளிய குடும்பங்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்லும் இந்தப் போக்கைத் தடுத்து, அரசு சுகாதார அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த இத்திட்டம் முக்கிய முன்னெடுப்பாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.