திருப்பூர்:
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராயபுரத்தில் வாகன சோதனை:
திருப்பூர் ராயபுரம் பகுதியில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ரூபாய் 70,000 பறிமுதல்:
விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம், மங்கலம் பூமலூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 45) என்பது தெரியவந்தது. எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வரும் இவர், தனது இருசக்கர வாகனத்தில் 70,000 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொண்டு சென்றார்.
சொந்த வேலைக்காக இந்தப் பணத்தைக் கொண்டு செல்வதாக அவர் கூறிய போதிலும், அந்தப் பணத்திற்குரிய முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்கள் இல்லாத அந்த 70,000 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.






