September 10, 2026

திருச்செந்தூர் கோவில் அன்னதானத்தில் புழு: ‘பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா?’ – அரசை சாடிய நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அன்னதான உணவில் புழு இருந்ததாக வெளியான புகாரை அடுத்து, தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் திருக்கோவிலின் சேவைக் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டதில் காட்டிய அக்கறையை, அன்னதான உணவின் தரத்தில் காட்டாதது ஏன்? அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா?

அன்று முறுக்கு பாக்கெட்டு உற்பத்தித் தேதிக்கு ஆதாரம் கேட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று புழு நெளிந்ததாக எழுந்துள்ள புகாரை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது! உடனடியாக இந்தப் புகாரைத் தீர விசாரித்து, அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் தலைமையிலான அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் ஆன்மீகப் பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed