April 23, 2026

திருக்கல்யாண விருந்தில்… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…

மதுரையில் நடைபெற உள்ள மீனாட்சி திருக்கல்யாணம் முன்னிட்டு, பக்தர்களுக்கான திருக்கல்யாண விருந்து ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாணத்தை ஒட்டி, அதற்கு முன்தினமான ஏப்ரல் 27ஆம் தேதி முதல் விருந்து தொடர்பான பணிகள் தொடங்குகின்றன. அதன்படி, ஏப்ரல் 27ஆம் தேதி மதியம் 1 மணி முதல் சமையலுக்கான காய்கறி வெட்டும் பணிகள் ஆரம்பமாகின்றன.இதில் கலந்து கொண்டு சேவை செய்ய விரும்பும் பக்தர்கள், தங்களது வீடுகளில் இருந்து அரிவாள்மனை மற்றும் கத்தி கொண்டு வந்து உதவுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதே நாளில் மாலை 5 மணி முதல் மாப்பிள்ளை விருந்து நடைபெற உள்ளது. 

தொடர்ந்து ஏப்ரல் 28ஆம் தேதி காலை 7 மணி முதல் இடைவெளியின்றி திருக்கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 12 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் பள்ளி வளாகத்தில் விரிவான பந்தல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த திருக்கல்யாண விருந்து நிகழ்ச்சி தொடர்ந்து 27ஆம் ஆண்டாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு சுமார் 1.40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு விருந்து பெற்றனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.