ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் இருந்து தபால்களை பறித்து சாக்கடையில் வீசிய போதை வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு திருநகர் காலனி தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக வேலை செய்பவர் சுரேஷ் (38). இவர் கருங்கல்பாளையம் கமலாநகர் பகுதியில் நேற்று தபால்களை உரியவர்களிடம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
தபாலை ஒரு வீட்டில் வழங்க சென்றபோது, வெளியே அவரது வாகனத்தில் வைத்திருந்த தபால்களை அந்த வழியாக வந்த போதை வாலிபர்கள் எடுத்து சென்றனர். அதில் முதியோர் உதவித்தொகை பணம் உள்ளதா? வேறு ஏதேனும் பணம் உள்ளதா? என அந்த வாலிபர்கள் பிரித்து பார்த்தனர்.
அப்போது ஒரு சில தபால்களை கிழித்து சாக்கடையில் வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த போஸ்ட்மேன் சுரேஷ் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து கருங்கல்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது போதை வாலிபர்களில் ஒருவர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கற்களை எடுத்து வீசி, கம்பத்திலும், கதவிலும் அவரே மோதிக்கொண்டார். போலீசார் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.
அந்த நேரத்தில் பொதுமக்கள் பிடித்து கொடுத்த மற்றொரு நபர், நைசாக அங்கிருந்து தப்பிச்சென்றார். இதையடுத்து தப்பிச்சென்ற நபரை பிடிக்க போலீசார் தனித்தனியாக பிரிந்து சென்று தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இருப்பினும் இரவு வரை அந்த நபர் சிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக டவுன் டிஎஸ்பி முத்துக்குமார், கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். தப்பியோடிய வாலிபரை விரைந்து பிடிக்க அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் தப்பியோடிய வாலிபர் நேற்று பிடிபட்டார். அந்த வாலிபர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த அருண் என்கிற கோபாலகிருஷ்ணன் (25), பிரகாஷ் (25), என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!