தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உலோகத்தாலான ஆறு சிலைகள் கண்டெடுப்பு. விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலைகள் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மானம்பாடி பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர், தனது வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்புகளை சீர் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வரப்பை வெட்டும்போது அங்கு பழங்கால சிலைகள் இருப்பதை கண்டறிந்தார்.
பின்னர், இது தொடர்பாக, அவர், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதனுக்கு தகவல் அளித்ததின் பேரில், அந்த இடத்திற்கு வந்த அவர், சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட யானை சிலை 1, திருவாச்சி 1, சிறிய சுவாமி சிலைகள் 3, உடைந்த பானை 1 என மொத்தம் 6 எண்ணிக்கையில் உலோகத்தினாலான சிலைகளை சேகரித்தார். பின்னர், திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வட்டாட்சியர் சாந்தமீனாவிடம், அந்த உலோகச் சிலைகளை வழங்கினார்.
இது தொடர்பாக வருவாய்த் துறையினர் கூறுகையில், “கண்டெடுக்கப்பட்ட சிலைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், இங்கு வந்து சிலைகளை சேகரித்துக் கொள்வார்கள். பின்னர், தொல்லியல் துறையினர், சிலைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபின், இந்த சிலைகள் குறித்து தெரிய வரும்” எனத் தெரிவித்தனர். கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் பழங்கால கோவில்கள் அதிகமாக இருக்கும் நிலையில், தொடர்ந்து இந்த பகுதிகளில் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More Stories
கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்ட சடலத்தின் பாதி கால்… பொதுமக்கள் அதிர்ச்சி …
வால்பாறை பகுதியில் சிறுத்தை ‘ஜாலி’ உலா: தொழிலாளர்கள் பீதி…
சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை: 19 பக்கம் உருக்கமான கடிதம்…