September 9, 2026

அ.தி.மு.க.வின் 10 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் த.வெ.க.வில் இணைவார்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கோபி:

அ.தி.மு.க.வைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணையவுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:

“தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்த காரணத்தால்தான் நான் த.வெ.க.வில் இணைந்தேன்.

தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வில் உள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் விரைவில் நமது த.வெ.க.வில் இணைய உள்ளனர். அடுத்த 6 மாதங்களில் மீதமுள்ளவர்களும் இணைந்து விடுவார்கள். அதன்பின்னர் அ.தி.மு.க. பூஜ்ஜியமாகிவிடும். இதனை நான் கூறவில்லை, அக்கட்சியில் உள்ளவர்களே என்னிடம் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலிருக்கும் வரை அ.தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பில்லை.”

இவ்வாறு அவர் பேசினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் விவகாரம் குறித்தும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

You may have missed