நில பட்டா மாற்றம் செய்ய ரூ.8000 லஞ்சம்: வி.ஏ.ஓ அதிரடி கைது…

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாபந்தி கூட்டத்தின்போது, நிலப் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக ரூ.8,000 லஞ்சம் பெற்றதாக ஒட்டை கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம் தனித்தாசில்தார் காதர் அலி தலைமையில் சமாபந்தி கூட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் கலைச்செல்வி, அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தருவதற்காக ரூ.8,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரபுவிடம் வழங்கி, அவற்றை கலைச்செல்வியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி, சமாபந்தி கூட்டத்திற்கு வந்த பிரபு, ரசாயனம் தடவிய பணத்தை கலைச்செல்வியிடம் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் கே.வி. கலைச்செல்வம் மற்றும் விழுப்புரம் ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஈஸ்வரி தலைமையிலான அதிகாரிகள், கலைச்செல்வியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கைது சம்பவம், அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சமாபந்தி கூட்டத்தின் போதே நிகழ்ந்ததால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.