September 9, 2026

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பேச்சைக் கண்டித்து த.வெ.க. சார்பில் தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார்!

தூத்துக்குடி: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அ.தி.மு.க. கட்சி குறித்தும் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியினர் குறித்தும் விமர்சித்து உரையாற்றினார்.

ஆர்.பி. உதயகுமாரின் இந்தப் பேச்சுக்கு த.வெ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், த.வெ.க. தூத்துக்குடி புறநகர் மாவட்ட பொருளாளர் அருண்குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்தப் புகார் மனுவில், “பொதுவெளியில் முதல்வர் குறித்தும், பெண்கள் குறித்தும், த.வெ.க. தலைவர் குறித்தும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடர்ந்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசி வருகிறார். எதிர்காலத்தில் இதுபோன்ற தனிநபர் விமர்சனங்களையோ, அவதூறுகளையோ பொதுவெளியில் தெரிவிக்காத வண்ணம் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may have missed