தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதில், அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என்று கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. அதற்கு விளக்கம் கொடுத்த லாரன்ஸ், “நான் அரசியலுக்கு வருவதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி வீடியோ வெளியிட்டார். அரசியலுக்கு வர தனது தாய் ஒப்புதல் கொடுத்துவிட்டாலும், மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த லாரன்ஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “என் ரசிகர்கள் உங்களை அழைத்து என் தாய் அவர்களை மேடை ஏற்றி முக்கிய அறிவிப்பை விரைவில் தெரிவிக்க உள்ளேன். தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல. அவர்கள் தான் அக்கட்சியின் அம்புக்குறிகள்” என்று கூறினார்.
இதற்கிடையே இந்த சந்திப்பின் போது, ராகவா லாரன்ஸ் ஒப்பீடு சர்ச்சையானது. முன்னதாக பேசும்போது, “தவெக அரசிற்கு ஒரு சில கால அவகாசம் கொடுக்க வேண்டும். நாம் ஒரு மாற்றம் வேண்டும் என நினைத்தோம். அது நடந்தது. அதற்கு ஏற்றார் போல் ஒரு சில கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு புதிய வீட்டிற்கு செல்லும் போது ஓனர் சாவி கொடுத்து உள்ளே போகும் போது தான் தெரியும் வீட்டில் என்னென்ன பிரச்சனை உள்ளது என்பது. எங்கே தண்ணீர் பிரச்சனை, எங்கே மற்ற பிரச்சனை உள்ளது என வீட்டிற்கு உள்ளே சென்றால் தான் தெரியும். வீட்டிற்கு அப்படி என்றால் நாம் நாட்டையே கொடுத்து உள்ளோம். அதே போல ஒரு ரோட்டில் புதிதாக ஒருவர் சென்றால் தெருநாய் கூட கத்தும். அப்படி கத்தும் தெரு நாய்க்கு பிஸ்கட் போட வேண்டும். ஒரு சில தெரு நாய் பிஸ்கட் சாப்பிடாது, பிரியாணி சாப்பிடும். அதற்கு பிடித்தது போல் சேர்த்து போட்டு அதை கத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாய்க்கு இப்படி என்றால் நாம் நாட்டை கொடுத்து உள்ளோம். எனவே அதற்கான அவகாசம் கொடுப்போம். விஜய் மீதான பொறாமையில் எதிர்கட்சியில் உள்ளவர்கள் விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்கள். கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதற்கு காரணம் பொறாமை தான் காரணம்” என்று ராகவா லாரன்ஸ் பேசினார். இந்த ஒப்பீடு பெரும் சர்ச்சையானது.

More Stories
தலையில் கேமரா மாட்டிக்கிட்டு வீட்டு வேலைகளை வீடியோ எடுத்தா ஒரு மணி நேரத்துக்கு ரூ.250 சம்பளம்!
தனியார் ரிசார்ட்டில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்:
தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள் மீது விரைவு ரயில் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு…