சீல் வைக்கப்பட்ட பின்பும் இயங்கிய கல்குவாரி; அதிகாரிகள் அதிரடி…

சீல் வைக்கப்பட்ட கல்குவாரி எந்தவொரு அனுமதியும் பெறாமல் சட்டவிரோத இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த ஆலைக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிக்கு அருகே விண்ணப்பள்ளி எனும் ஊராட்சி கிராம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனம் இயங்கி வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிறுவனத்தில் கனிமவளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், அது அரசு அனுமதித்த அளவைவிட, அதிக அளவில் சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுத்தது தெரிய வந்தது.

இந்த குற்றத்திற்காக அந்த நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் அபராதம் விதித்ததுடன், கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனத்திற்கு சீலும் வைக்கப்பட்டது. இந்த நிலையில், சீல் வைக்கப்பட்ட கிரஷர் நிறுவனம், அரசிடம் உரிய அனுமதி பெறாமல், மீண்டும் கற்களை உடைப்பதற்காக அப்பகுதியில் கற்களைக் கொட்டி வைத்துள்ளது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததன் பேரில், சத்தியமங்கலம் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனுமதி பெறாமல் கற்களை உடைக்கும் பணியில் கல்குவாரி நிர்வாகம் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், முறைகேடாக இயங்கிய காரணத்தால் கற்களை உடைக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு பொக்லைன் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் மேற்கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு வருவாய் துறை சார்பில் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

முன்னதாக, சீல் வைக்கப்பட்ட இந்த கிரஷர் நிறுவனத்தால் பெரும் சிரமங்கள் ஏற்படுவதாகக் கூறி, அதன் அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கிரஷர் நிறுவன ஊழியர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் நியாயம் கேட்டு வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

மேலும், அந்த நேரத்தில் ஊழியர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே, சத்தியமங்கலம் வருவாய் துறை அதிகாரிகள் கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனத்துக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

புதிதாக கனிமவளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரபு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் ஆய்வு மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனம் சட்டவிரோதமாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த ஆலைக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.