மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே, மாநகராட்சி வாகன காப்பகத்தில் உறங்கிக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் அதிகாலைபயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக முதன்மை குற்றவாளி உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி: மதுரை உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பகம் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை குபேந்திரன் (17) என்ற சிறுவன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், உறங்கிக் கொண்டிருந்த குபேந்திரனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியது.
போலீஸ் விசாரணை மற்றும் கைது: இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கொலையில் தொடர்புடைய முத்துமணி என்ற இளைஞர் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 5 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம்: போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சமீபத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் போது சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாகவே, முத்துமணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குபேந்திரனைத் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, கொலையான சிறுவன் குபேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்!
மலைப்பகுதியில் வாலிபர் அடித்து கொலை…
தொடர் பைக் திருட்டு கைதான வாலிபர் காவல்நிலையத்தில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு…