ஹெல்மெட் அணியாத காவலர்.. டிஐஜி கொடுத்த நூதன தண்டணை… 

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர் தனது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி டாக்டர் திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்., ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர் வெங்கடேஷை கவனித்தார்.

இதையடுத்து, தனது உதவியாளர் மூலம் காவலர் வெங்கடேஷை அலுவலகத்திற்கு வருமாறு டி.ஐ.ஜி அழைப்பு விடுத்தார். அலுவலகத்திற்குச் சென்ற வெங்கடேஷ், அபராதம் விதிக்கப்படுமோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், டி.ஐ.ஜி அவரிடம் மிகவும் கனிவாக பேசி, ஹெல்மெட் அணியாததற்கான காரணத்தை கேட்டறிந்தார். பின்னர் அவருக்கு எந்த அபராதமும் விதிக்காமல், “இப்போது அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அங்குள்ள தலைக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்து நோயாளிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசிவிட்டு வாருங்கள்” என்று நூதனமான உத்தரவை பிறப்பித்தார்.

டி.ஐ.ஜி-யின் அறிவுறுத்தலின்படி அரசு மருத்துவமனைக்குச் சென்ற காவலர் வெங்கடேஷ், ஹெல்மெட் அணியாமல் ஏற்பட்ட விபத்துகளில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் வேதனையையும், அவர்களது குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரத்தையும் நேரில் கண்டார். மேலும், அங்கிருந்த மருத்துவர்களிடமும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து ஆலோசனைகளை பெற்றார்.