April 22, 2026

பல முறை போராடியும் பட்டா கிடைக்காததால் … தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்…

மயிலாடுதுறை மாவட்டம் டாக்டர் கலைஞர் நகர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்க வேண்டும் என்று போராடி பட்டா கிடைக்காததால் தேர்தல் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். பலமுறை மாவட்ட ஆட்சியாளரிடமும், தமிழக அரசிடமும் மனு கொடுத்தும் பட்டா வழங்கவில்லை. பட்டா வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் தெருவில் மொத்தமாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் எங்கள் தாத்தா பாட்டி காலத்தில் இருந்து 150 வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம். இத்தனை காலம் இருந்தும் இதுவரை எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. நிறைய கட்சி நபர்கள் வருகிறார்கள் செய்து தருகிறோம் என்று வாக்குறுதி தருகிறார்கள். ஆனால் இதுவரை எதுவும் செய்து தரவில்லை. இந்த தெருவை காலி செய்ய சொல்கிறார்கள். ஆனால் பட்டா தருகிறோம் இருங்கள் என்று சொல்வதில்லை.

எங்களுடைய அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்று பட்டா என்பது மிக அவசியம். இந்த பட்டா இல்லாததால் கரண்ட் வசதி சரிவர கிடையாது. பாதாள சாக்கடை சரிசெய்வதில்லை. அரசாங்க சலுகைகள் எதுவும் எங்களுக்கு கிடைப்பதில்லை. பட்டா எங்களுக்கு இருந்தால் ஏதாவது ஒரு லோன் வாங்க முடியும் எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். நிறைய அதிகாரிகளிடம் இதனை பற்றி பேசி மனு கொடுத்து போராடியும் பார்த்துவிட்டோம். தற்போது உள்ள ஆட்சியில் பட்டா எங்களுக்கு கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்த வரும் ஆட்சியிலும் இதே நிலைமை தான் தொடரும். அதனால் தான் நாங்கள் தெருவாசிகள் ஒன்றாக முடிவெடுத்து இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.