September 9, 2026

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு கட்டாயம்: பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவு

சென்னை:

தமிழகத்தில் புதிய திட்டங்களில் வீடு மற்றும் மனை விற்பனைக்கான பத்திரங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும், மேனுவல் முறையில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் மூலம், இனி வீடு அல்லது மனை வாங்குவோர் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்குப் பதிவுத்துறை தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:

  • ஆகஸ்ட் 17 முதல் அமல்: ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் புதிய திட்டங்களின் பத்திரப்பதிவுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
  • அலுவலக வசதிகள்: கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வெப் கேமரா, தரமான பயோமெட்ரிக் கருவிகள், கருவிழிப் பதிவு (Iris scan) கருவிகள் மற்றும் 100 Mbps வேகத்திலான இணையதள வசதி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • புகைப்படக் கட்டுப்பாடு: வெப் கேமரா மூலம் படம் பிடிக்கும் இடத்தின் பின்னணித் திரை எந்தவிதப் படங்களும் இன்றித் தெளிவாக இருக்க வேண்டும்.
  • முன்பதிவு லாக்-இன்: பதிவுத்துறை இணையதளத்தில் தேவையான ‘லாக்-இன்’ (Log-in) வசதிகளை முன்கூட்டியே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்த அனைத்து நிறுவனங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பதிவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

You may have missed