டம்மி துப்பாக்கி காட்டி நகை மதிப்பீட்டாளரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை: திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்…

திருச்சியில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மதிப்பீட்டாளரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிராவை சேர்ந்தவர் உதய் (36), திருச்சி பெரிய செட்டி தெருவில் குடும்பத்தோடு தங்கி, நகை மதிப்பீடு பணி செய்து வருகிறார். குடும்பத்தினர் அனைவரும் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்கு சென்ற நிலையில், உதய் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டின் கீழ் தளத்தில் அவரது கடையில் பணியாற்றும் நிதின் தங்கி உள்ளார். பகல் 12 மணியளவில் 5 பேர் நிதினிடம் சென்று உங்கள் ஓனரிடம் பேச வேண்டும் என கூறினர். 5 பேரையும் உதய் வீட்டிற்கு நிதின் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, 5 பேரும் திடீரென உதயை அடித்து, பாத்ரூமில் அடைத்து கதவை பூட்டி விட்டனர். நிதினையும் அடித்து கட்டி போட்டனர். பின்னர் உதய் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். உதய் அலறும் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து பாத்ரூமில் இருந்த அவரை மீட்டு, திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். வீட்டில் இருந்த 1 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக உதய் கோட்டை போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்துது 5 பேர் கொண்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,‘‘ நகையை கொள்ளையடித்து பிறகு 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்துள்ளனர். பின்னர், அவர்கள் தயாராக இருந்த ஆட்டோவில் சென்றுள்ளனர். மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சி பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம். கொள்ளையர்கள் உதய் வீட்டில் இருந்த கேமராக்களை சேதப்படுத்தி, ஹாஸ்டு டிஸ்கை எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் டம்மி துப்பாக்கியை பயன்படுத்தியதாக தெரிகிறது. உதய்க்கு தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம்,’‘என்றனர்