பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி 50 அடி மலை பள்ளத்தாக்கில் வீசிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியில் பொய்குணம் செல்லும் சாலையில் அலமேலு(59) என்பவர் குடும்பத்தினருடன் வசித்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த மாதம் 23ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அலமேலு வீடு திரும்பவில்லை. இதுபற்றி கணவர் பாஸ்கர், சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ராஜப்பன்(40) என்பவர் அலமேலுவை நான்தான் கொலை செய்தேன் என சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: ராஜப்பன் மர வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அலமேலு வாடகைக்கு குடியிருந்துள்ளார். இந்த பழக்கத்தில் அலமேலுவிடம், ராஜப்பன் ரூ.2500 கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக கடனை திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அலமேலு, பணத்தை உடனடியாக தரவேண்டும் என செல்போனில் தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதையடுத்து நண்பரிடம் பணம் வாங்கி தருவதாக கூறி கடந்த 23ம் தேதி ராஜப்பன் பைக்கில் கல்வராயன்மலையில் உள்ள வஞ்சிக்குழி கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வீடு பூட்டி இருந்ததால் ஆத்திரமடைந்த அலமேலு, ராஜப்பனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ராஜப்பன், அருகில் இருந்த கல்லை எடுத்து அலமேலுவை பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் அலமேலுவின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கல்வராயன்மலை 50 அடி பள்ளத்தாக்கில் வீசிவிட்டு இரவோடு இரவாக வீட்டுக்கு சென்றுள்ளார்.
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதை அறிந்து சரணடைந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ராஜப்பனை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று அலமேலுவின் உடலை அழுகிய நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையை ராஜப்பன் தனியாளாக செய்திருக்க முடியாது என சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், ராஜப்பனின் மனைவி சுகன்யா(29) மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான பாண்டுரங்கன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சுகன்யா மற்றும் பாண்டுரங்கனையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

More Stories
கோயில் மணிகள் திருட்டு.. கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி…
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.10 கோடி பணமோசடி: மதுரையில் தம்பதி கைது..
மகுடஞ்சாவடி – வீரபாண்டி இடையே தண்டவாள பராமரிப்பு பணி: ஈரோடு வழியிலான 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்!