September 10, 2026

சொத்து தகராறில் தந்தையை கொடுவாளால் வெட்டி கொன்ற மகன்…

கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் மதுபோதையில் கொடுவாளால் தந்தையை வெட்டி படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55), இவர் ஏரியில் மீன் குத்தகை எடுத்து மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு அய்யப்பன் (33), பூவரசன் (30) என்ற 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரன், அதே கிராமத்தில் 5 சென்ட் மற்றும் 6 சென்டில் 2 வீட்டுமனை உள்ளது. பூவரசன், தனியாக வீடுகட்டி வசிக்கும் நிலையில், அய்யப்பன் பழைய வீட்டிலே வசித்து வந்தார்.

இந்நிலையில் புதியதாக வீடு கட்டுவதற்கு, தனது தந்தை ராஜேந்திரனிடம், ஒரு வீட்டுமனை பாகம் பிரித்து கொடுக்க வேண்டி அய்யப்பன் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை ராஜேந்திரன் மற்றும் அய்யப்பன் மதுபோதையில் இருந்துள்ளனர்.

அப்போது இவ்விவகாரம் தொடர்பாக தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அய்யப்பன் வீட்டில் மீன்வெட்ட வைத்திருந்த கொடுவாளால், ராஜேந்திரனின் பின்புற தலையில், கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேந்திரன் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார், வழக்குபதிந்து அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed