September 10, 2026

பாட்டி, பேத்தி கொலை? கிணற்றுக்குள் தூக்கில் சடலமாக மீட்பு…

சேலத்தில் கிணற்றுக்குள் பாட்டி, பேத்தி சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில், கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனியை சேர்ந்தவர் அம்மணி (60). இவருக்கு ராஜா (46), நாகராஜ் (41) என 2 மகன்கள் உள்ளனர்.

இருவருக்கும் குடிபழக்கம் இருப்பதால் இவர்களுடன் மனைவிகள் வாழ விரும்பாமல் சென்று விட்டனர். ராஜாவின் மாற்றுத்திறனாளி மகளாக சதாஸ்ரீயை(24) பாட்டி அம்மணி கவனித்து வந்தார். மகன் ராஜா வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு தினமும் தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் தனது 2 ஏக்கர் நிலத்தையும் விற்று குடித்தே அழித்து விட்டாராம்.

இந்நிலையில் காலை நீண்டநேரமாகியும் அம்மணியும், சதாஸ்ரீயும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது வீட்டு கிணற்றுக்குள் கம்பியில் பாட்டி அம்மணியும், பேத்தி சதாஸ்ரீயும் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. தகவலறிந்து கன்னங்குறிச்சி போலீசார் வந்து கிணற்றுக்குள் அந்தரத்தில் தொங்கிய இருவரது சடலங்களை மீட்டனர். தினமும் மகன் தகராறு செய்ததாலும், சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாததாலும் வேதனையில் பேத்தியை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பிறகு, அம்மணி சேலையை கழுத்தில் கட்டி கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்திருப்பார் என கூறப்படுகிறது.

அதேநேரத்தில் 24 வயது பேத்தியை அவர் எப்படி கழுத்தில் சேலையை கட்டி தள்ளிவிட்டிருப்பார் என்பதால் இருவரையும் யாரும் கொலை செய்து கிணற்றில் தொங்கவிட்டிருப்பார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் உள்ள ராஜாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed