April 24, 2026

அதிகாலை 6 மணிக்கு வந்த இமெயில்…46,750 ஊழியர்கள் பணிநீக்கம்…மெட்டா, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் அதிரடி!.

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கோடிக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலும் இத்துறைகளில் லட்சக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பார்க்கின்றனர். இந்தச் சூழலில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, AI டேட்டா சென்டர்களை அமைப்பதற்கான மிகப்பெரிய முதலீடுகள் காரணமாக தொழில்நுட்ப துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், மெட்டா, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெறும் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 46,750 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

அதன்படி, மெட்டா நிறுவனம் மட்டும் ஏறத்தாழ 8,000 வேலைகளைக் குறைக்கத் தயாராகி வருகிறது. இது அதன் மொத்தப் பணியாளர்களில் சுமார் 10 சதவீதமாகும். மேலும், முன்னர் ஆள்சேர்ப்பு செய்யத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டாம் என்றும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதேபோல், ஆரக்கிள் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் 30,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். எனினும், பணிநீக்கங்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பல அறிக்கைகள் மற்றும் ஊழியர்களின் கூற்றுக்கள் அந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. இந்தியாவில், சுமார் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம், நேரடிப் பணிநீக்கங்களுக்குப் பதிலாக, அந்நிறுவனம் தனது அமெரிக்கப் பணியாளர்களில் சுமார் 7 சதவீதத்தினருக்கு, அதாவது ஏறத்தாழ 8,750 ஊழியர்களுக்கு,தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகும் திட்டத்தை அறிவித்துள்ளது. தனது 51 ஆண்டு கால வரலாற்றில், மைக்ரோசாப்ட் இதுபோன்ற ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். நிறுவனங்கள் இதை மறுசீரமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவில் முதலீடு என்று சொன்னாலும் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தவிர, இது தொழில்நுட்பத் துறையில் உள்ள பலருக்கு மிகவும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.