November 3, 2026

கோவை சிறை வளாகத்திலேயே போலீசாரை ஏமாற்றி தப்பிய கைதி மீண்டும் கைது! பவானிசாகரில் சுற்றிவளைத்த தனிப்படை

கோவை:

கோவை மத்திய சிறை வளாகத்தில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடிய கைதி ராகவனை, தனிப்படை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் ராகவன். இவர் மீது கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூன் மாதம் கோவை மத்திய சிறையிலிருந்து போலீசார் அழைத்துச் சென்றனர்.

விசாரணை முடிந்து மீண்டும் கோவைக்கு அழைத்து வரப்பட்டபோது, அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சாக்கவுண்டனூர் பகுதியில் போலீசாரின் பிடியிலிருந்து ராகவன் தப்பியோடினார்.

இதையடுத்து கர்நாடக போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்னூர் போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், பவானிசாகர் பகுதியில் ராகவன் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

பின்னர் அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராகவனை, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது சிறை வளாகத்தின் முதல் நுழைவாயிலைக் கடந்ததும் ராகவனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கைவிலங்கை போலீசார் அகற்றியுள்ளனர்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ராகவன், போலீசாரை ஏமாற்றிவிட்டு திடீரென அங்கிருந்து தப்பியோடினார். உடனடியாக போலீசார் அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை.

சிறை வளாகத்திலேயே கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதாக நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே ராகவனைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில், பவானிசாகர் பகுதியில் அவர் மீண்டும் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், ராகவனைச் சுற்றிவளைத்து மீண்டும் கைது செய்தனர்.

இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சிறை வளாகத்திலேயே போலீசாரை ஏமாற்றி இரண்டாவது முறையாகத் தப்ப முயன்ற கைதி மீண்டும் பிடிபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.