சிவகங்கையில் பாரம்பரிய உரிமைகள் மறுப்பு:  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் காத்திருப்பு

சிவகங்கையில் பாரம்பரிய உரிமைகள் மறுப்பு:  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் காத்திருப்பு “

​சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழாக்களில், தங்களது பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்பட்டு சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளனர்.

​பின்னணி மற்றும் பாரம்பரிய உரிமைகள் 

​நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதேபோல் பங்குனி மாதத்தில் சேங்கை விட்டு திருவிழாவும், சித்திரை மாதத்தில் ஸ்ரீ ஐயனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவும் நடத்தப்பட்டு வருகின்றன.

​இத்திருவிழாக்களில், மேனாட்டான் வகையறாவைச் சேர்ந்த அழகர்சாமி, நாராயணன், முத்துக்குமார் உள்ளிட்ட வாரிசுதாரர்களின் முன்னோர்களுக்குக் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புச் செப்புப்பட்டயங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்:

​மேளம் கொட்டுதல்

​காலாஞ்சி வாங்குதல்

​தேருக்கு தைலக் கொட்டீஸ் கொண்டு செல்லுதல்

​தேருக்கு கிடாய் வெட்டுதல்

​கொடிமரத்திற்கு கயிறு திரித்தல் மற்றும் அதற்கான 11 சாதம் பெறுதல்

​கட்டளை காசு, அரிசி வாங்குதல்

​உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய ஆன்மீகப் பணிகளைத் தங்களது குடும்பத்தினரே தலைமுறை தலைமுறையாகச் செய்து வந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

​குற்றச்சாட்டும் புறக்கணிப்பும்:

​நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் செப்புப்பட்டயங்கள் இருந்தபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்குடும்பத்தினர் திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

​இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

​”கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களைத் திருவிழாவில் சேர்க்காமல் சமூக ரீதியாக ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், ‘ஊர் முன் விழுந்து கும்பிட்டு வந்தால் மட்டுமே திருவிழாவில் சேர்த்துக் கொள்ளப்படும்’ என கோவில் நிர்வாகத் தரப்பில் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நாங்கள் ஊருடன் இணைந்து தேர் இழுக்கவும், திருவிழாவில் பங்கேற்கவும் தயாராகவே இருக்கிறோம். ஆனால், எங்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள். இதற்குச் சில நிர்வாக மற்றும் அரசு அலுவலர்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கிறோம்.” எனத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

​அதிகாரிகளுக்கு மனு:

​தங்களுக்குரிய நியாயமான பாரம்பரிய உரிமைகளைப் பெற்றுத்தரக் கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 25.05.2026 அன்று தமிழக முதல்வர், அறநிலையத் துறை இயக்குநர், சிவகங்கை சமஸ்தானம், மாவட்ட ஆட்சியர், காளையார்கோவில் தாசில்தார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் விரிவான புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

​”ஏழையின் கூக்குரல் மேல்மட்ட செவிகளுக்கு எட்டுமா?” என்ற கேள்வியோடு, தங்களது பாரம்பரிய உரிமைகளையும், குடும்பப் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தமிழக முதல்வரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.