April 21, 2026

தேர்தலை முன்னிட்டு மதுபானக்கடை, பட்டாசு கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இன்று மாலை முதல் அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரை மற்றும் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எந்தவொரு பிரச்சினைகள் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 24 மற்றும் மே 2 முதல் மே 4-ம் தேதி வரை என வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெடி பொருட்கள் சட்டவிதிகள் 1884-ன் படி அரசு உரிமம் பெற்ற கடைகள், கிடங்குகளை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் உரிமம் ரத்து செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஏப்ரல் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 23-ம் தேதி வரை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியிடும் மே 4-ம் தேதி அன்று டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள் அனைத்து விதமான மதுபான விற்பனை நிலையங்களும் முழுமையாக மூடப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.