April 29, 2026

சொத்து பிரச்சனைக்காக மனைவியை, நண்பர்களுடன் காரில் கடத்திய கணவர்…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, டி.களத்தூர் அருகேயுள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(48). இவரது மனைவி செல்வராணி (43). இவர்களுக்கு ரம்யா (எ) மணிமேகலை(23), கீர்த்தனா(21), மகள்களும், ரஞ்சித் (20) என்ற மகனும் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பெருமாள் அங்கிருந்து சம்பாதித்த பணத்தை மனைவி செல்வராணியிடம் கொடுத்து வந்துள்ளார்.

அந்த பணத்தில் செல்வராணி சொத்துக்களை சேகரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்வராணியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் ஊர் திரும்பினார். இதனிடையே மூத்த மகள் மணிமேகலை திருமணமாகி குடும்ப பிரச்சனைக்காக தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மனைவி நடத்தை தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக கணவனை விட்டுப் பிரிந்த செல்வராணி, பெரம்பலூர் கோல்டன் சிட்டி பகுதியில் மகள் கீர்த்தனா, மகன் ரஞ்சித்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, வீட்டின் உரிமையாளர் கலிய பெருமாளின் சகோதரரான மகேஷ் குமாருடன் கீர்த்தனாவுக்கு காதல் ஏற்பட்டது.

இதனால், செல்வராணியே இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். மகன் ரஞ்சித் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தனது மகள் கீர்த்தனா, மருமகன் மகேஷ்குமார் ஆகியோருடன் மதுரையில் தங்கியிருந்த செல்வராணி கடந்த வாரம் மகள், மருமகனுடன் பெரம்பலூருக்கு வந்தார். இதனிடையே வெளிநாட்டில் இருந்து தான் அனுப்பிய பணத்திற்கு வாங்கிய சொத்துக்களை தனது பெயரில் எழுதித் தரும்படி பெருமாள், தனது மனைவி செல்வராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது நண்பர் இளவரசன் உள்ளிட்டோர் உதவியுடன் காரில் வந்த பெருமாள், மனைவி செல்வராணியை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றி சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக மகள் கீர்த்தனா, எனது அப்பா சிலருடன் வந்து எனது அம்மாவை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று விட்டார், அம்மாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை மீட்டுத் தாருங்கள் என ஆடியோ பதிவு ஒன்றையும், அம்மா செல்வராணியை கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி பதிவுகளையும் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக கீர்த்தனா அளித்தப் புகாரின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் (பொ) இந்திரா தலைமையில் தனிப்படையினர் கடத்திச் செல்லப்பட்ட செல்வராணி மற்றும் அவரது கணவர் பெருமாள் உள்ளிட்ட அவரது நண்பர்களையும் வலைவீசித் தேடி வருகின்றனர். பெரம்பலூரில் மனைவியை கணவனை காரில் கடத்திச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்கள் மூலமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.